திங்கள், 10 டிசம்பர், 2012

அன்பான வேண்டுகோள்

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
அன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே! நீங்கள் எல்லா விதமான பாக்கியங்களையும் நிறைவாகப்  பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுகின்றேன்.
இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி புதிய புதிய பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் சமூகத்தில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்துகின்ற நிலை சமூகத்தில் தொடர்கதையாகி விட்டது. இதன் மூலம் புதிய அமைப்பு காணக்கூடியவர்கள் என்ன
விரும்புகிறார்கள் என்பது புரியவில்லை. பதவிக்காக செய்கிறார்களா
? அல்லது உலகாதாயத்திற்காக செய்கிறார்களா? என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம். காரணம், இவர்கள் என்ன நோக்கத்தில் புதிய சங்கங்களை இஸ்லாத்தின் பெயரால் உருவாக்குகிறர்களோ அதே நோக்கத்தை ஏற்கெனவே இருந்து வரும் அமைப்புகள் செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது அதே நோக்கத்திற்காக இன்னொரு அமைப்பு நவீன பெயரில் தேவைதானா? இது ஏற்கெனவே செயல்பட்டு வரும் அமைப்பிற்கு எதிராகவும் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் ஆகாதா? ஒற்றுமை என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சமுதாயத்தை மேலும் பிளவு படுத்தும் சூழ்ச்சி அல்லவா இது?
இளைஞர்களே! விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்!! உங்கள் ஈமானை இழந்து விடாதீர்கள்!! அல்லாஹ்வுடைய தூதர்கள் மேற்கொண்ட அறப்பணியான மனித சமூகத்தை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்ற மாபெரும் அக்கிரமத்திலிருந்து காப்பாற்றும் பணியை கண்டு கொள்ளாமல் இருக்கும் சமுதாயம் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை.
நிரந்தர மறுமையின் வெற்றிக்கு வழிவகுக்கின்ற ஏகத்துவப் பிரச்சாரத்தை, நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கின்ற இணைவைப்பிலே உழன்றுக் கொண்டிருக்கின்ற நமது பெற்றோர், சகோதர, சகோதரிகள், உறவினர், ஊர் ஜமாத்அத்தார்களிடம் செய்து அவர்களை அம்மாபெரும் பாவத்திலிருந்து மீட்டெடுக்க முயற்சிப்போமாக!
இவ்வாறு செய்யும் வேளையில் சமுதாய ஒற்றுமை என்ற போலி ஒற்றுமை பேசும் போலிகளையும் இனம்கண்டு அவர்களை ஒதுக்கிவிட்டு நமது முயற்சியில் தொடர்ந்து செயல்பட அல்லாஹ் அருள்புரிவானாக.
இணைவைத்தலுக்கு எதிராக ஜிஹாத்எனும் அறப்போராட்டம் செய்யப் புறப்படுங்கள். அதுதான் இறைத்தூதர்க்ள செய்த போராட்டம். இனவாதத்தை கை விடுங்கள்! மனிதநேயத்தைக் கடைபிடியுங்கள்! குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் அடிப்படையில் துய்மையான வடிவில் இஸ்லாத்தினை பின் பற்றி வாழ எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அத்தகைய நற்கிருபையை வழங்க பிராத்திப்போம்.
குர்ஆன் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஜமாஅத்துடன் இணைந்து செயல்படுங்கள். மறுமையில் வெற்றி பெறுவீர்கள், இன்ஷா அல்லாஹ்.

இப்படிக்கு உங்கள் நலன் நாடும் நண்பன்
எம். எம். ரிஸ்வான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக