வியாழன், 14 மார்ச், 2013

தவறு செய்யப் போகின்றாயா? தொடர் 01

எழுதியவர்சகோ. பைரூஸ்


இவ்வுலகில் அல்லாஹ் மனிதனைத் தவறுக்கும், மறதிக்கும் மத்தியிலே படைத்துள்ளான்.

அவ்வகையில் ஒரு மனிதன் தவறு செய்வதற்கு ஷைத்தான் தூண்டுதலாய் இருக்கின்றான். ஒரு மனிதன் தவறு செய்வதற்கு முன் தான் இத்தவறை செய்தால் தனக்கு ஏற்படக் கூடிய எதிர் விளைவுகள் என்ன? என்பதைப் பற்றிச் சிந்தித்தால் அந்தத் தவறிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

அவ்வகையில் தவறு, பாவம் செய்வதற்ககு முன்னர் பின்வரும் விடயங்களைப் பற்றி சற்று நேரம் சிந்திக்க வேண்டும். அவையாவன,

01.இறைவனின் கண்கானிப்பு:

நீ எங்கிருந்தாலும் அல்லாஹ் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான், நீ பேசுபவைகளை செவிமடுக்கின்றான் என்பதை ஒரு கனம் சிந்தித்துப் பார்.

நீ தவறு செய்வதற்கு முன் அல்லாஹ் கூறுவதைப் பார்.

'வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூவரின் இரகசியப் பேச்சில் அவன் அவர்களில் நான்காமவனாக இருக்கின்றான். இன்னும், ஐவரில் அவன் அவர்களில் ஆறாமவனாக இருக்கின்றான். இதைவிடக் குறைவாகவோ, அல்லது கூடுதலாகவோ இருந்தாலும் அவர்கள் எங்கிருந்த போதிலும் அவன் அவர்களுடனேயே இருக்கின்றான். பின்னர், அவர்கள் செய்தவற்றை அவன் அவர்களுக்கு மறுமை நாளில் அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்.' (58:7)

இவ்வசனத்திலே அல்லாஹ் நீ என்ன பேசினாலும் அதனை செவிமடுக்கின்றான். அதேபோல். 'கண்களின் மோசடியையும், உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்.' (40:19)

உனது உள்ளத்தில் உள்ள அத்தனையையும் அல்லாஹ் அறிவான் என்று சொல்கிறான். எனவே சகோதரனே! நீ தவறை செய்வதற்கு முன்னர் நான் இந்தத் தவறை செய்தால் நிச்சயமாக என்னைப் படைத்த அல்லாஹ் என்னைப் பார்ப்பானே, அவன் பார்க்கும் நிலையில் நான் தவறு செய்வதா? என்று சிந்தித்துப்பார்.

02.மலக்குகள் பதிகின்றனர்:

நீ பேசக்கூடியவைகள், செய்யக் கூடியவைகளை அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட வானவர்கள் பதிவு செய்கின்றார்கள் என்பதை ஒரு கனம் சிந்தித்துப் பார்.

நீ செய்யக் கூடிய நல்ல காரியங்கள், கெட்ட காரியங்கள், நீ பேசக் கூடிய நல்ல வார்த்தைகள், கெட்டவார்த்தைகள் என்பனவற்றைப் பதிவு செய்வதற்காக அல்லாஹ்வின் வானவர்கள் உனக்கென நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அல்லாஹ் கூறுகின்றான்.

'அல்லது அவர்களது இரகசியத்தையும், அவர்களது இரகசிய உரையாடலையும் நிச்சயமாக நாம் செவியேற்க மாட்டோம் என அவர்கள் எண்ணிக் கொள்கின்றனரா? அவ்வாறன்று, அவர்களிடத்தில் உள்ள நமது தூதர்கள் (அவற்றை) பதிவு செய்கின்றனர்.' (43:80)

'(எழுதுவதற்கு) தயாரான கண்காணிப்பாளர் அவனிடம் இருந்தேயன்றி எந்த ஒரு வார்த்தையையும் அவன் மொழிவதில்லை.' (50:18)

போன்ற வசனங்கள் நீ செய்யக் கூடிய காரியங்களைப் பதிவு செய்வதற்காக வானவர்கள் இருக்கின்றார்கள் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

எனவே, நீ ஒரு தவறை, பாவத்தைச் செய்வதற்கு முன் இந்தத் தவறை நான் செய்துவிட்டால் அதை வானவர்கள் பதிந்து விடுவார்களே! என்று ஒரு கனம் சிந்தித்துப் பார்!

03.முதல் மனிதன் தண்டிக்கப்படல்:

உன்னுடையதும், ஒட்டுமொத்த சமுதாயத்தினதும் பெற்றோர்களான ஆதம்(அலை) அவர்களையும், அவர்களது மனைவியான ஹவ்வாவையும் சுவனத்திலிருந்து வெளியேற்றியது இந்தத் தவறுகள் தான் என்பதை சற்று சிந்தித்துப் பார்.

'மேலும் நாம், 'ஆதமே! நீரும் உம் மனைவியும் இச்சுவர்க்கத்தில் குடியிருங்கள். மேலும், நீங்கள் இருவரும் விரும்பியவாறு தாராளமாக அதிலிருந்து புசியுங்கள். ஆனால், நீங்கள் இருவரும் இம்மரத்தை நெருங்க வேண்டாம். அவ்வாறெனில், 'நீங்கள் இருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்' என்றும் நாம் கூறினோம்.'

'இதன்பின் ஷைத்தான், அவ்விருவரையும் அதிலிருந்து தடம்புறழச் செய்து, அவ்விருவருட மிருந்த(இடத்)தை விட்டும் அவர்களை வெளியேற்றினான். இன்னும், 'நீங்கள் இங்கிருந்து இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாவீர்கள். உங்களுக்குப் பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வாழ்க்கை வசதியும் உள்ளன' என்று நாம் கூறினோம்.'

'பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்பும் கேட்டு)க் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான்.' (2:35-37)

'அவ்விருவரும் அதிலிருந்து உண்டதும், அவ்விருவரினதும் வெட்கத்தலங்கள் அவ்விருவருக்கும் வெளிப்பட்டன. அவ்விருவரும் சுவனத்தின் இலைகளால் தம்மை மூடிக்கொள்ள முயன்றனர். ஆதம் தனது இரட்சகனுக்கு மாறுசெய்தார். அதனால் வழிதவறினார்.' 'பின்னர் அவரது இரட்சகன் அவரைத் தேர்வு செய்து, அவரை மன்னித்து, நேர் வழியும் காட்டினான்.' (20:121-122)

எனவே, உனது பெற்றோரை சுவனத்திலிருந்து வெளியேற்றிய இந்தத் தறை நீ செய்தால் நீயும் சுவனத்திற்குச் செல்வதற்கு அது தடையாக இருக்கும் என்பதை நீ தறை செய்வதற்கு முன்னர் சிந்தித்துப் பார்!!.

04.மரணத்தை நினைத்தல்:

நீ தவறு செய்வதற்கு முன் மரணத்தையும், ஸகராத்துடைய நிலையையும் சற்று சிந்தித்துப் பார்.

'ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே! நீங்கள் உங்களுக்கான கூலிகளை மறுமை நாளில்தான் முழுமையாக வழங்கப்படுவீர்கள். எவர் நரகத் திலிருந்து தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப் படுகின்றாரோ அவரே வெற்றி பெற்றவராவார். இவ்வுலக வாழ்வு ஏமாற்றம் தரும் இன்பமேயன்றி வேறில்லை. ' (3:185)

இவ்வசனங்களிலேயே அல்லாஹ் ஸகராத்துடைய வேதனையும், மரணமும் ஒரு மனிதனுக்கு இருக்கின்றது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

சகோதரனே!
நீ தவறை செய்வதற்கு முன் நான் இந்தத் தவறைச் செய்த நிலையில் மரணித்து விட்டால் என்னுடைய நிலை என்ன? என்னை யார் பாதுகாப்பார்கள்? என்னுடைய ஸகராத்துடைய நிலமை எவ்வாறு இருக்கும்? நான் தவறைச் செய்த நிலையில் ஸகராத்துடைய நிலையை அடைந்து விட்டால் எனது நாவிலிருந்து நபிகளார் சொல்லித் தந்த 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற வார்த்தை வராமல் போய்விடுமே! என்று ஒரு முறை சிந்தித்துப் பார்! .

05.கப்ர் வாழ்வில் துன்பம்:

பாவம் கப்ரில் வேதனை செய்யப் படுவதற்கான ஒரு காரணம் என்பதை சிந்தி!

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளை கடந்து சென்றார்கள். அப்போது 'நிச்சயமாக இவர்களிருவரும் வேதனை செய்யப் படுகின்றார்கள். இவர்களிருவரும் பெரிய பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. அவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காமலிருந்தார். அடுத்தவர் மனிதர்களிடத்திலேயே கோள் சொல்லித் திரிந்தார்.' என்று நபி(வ) அவர்கள் கூறினார்கள்.' (புஹாரி)

சகோதரனே!
ஒரு தவறை நீ செய்வதற்கு முன் நான் இந்தத் தவறைச் செய்துவிட்டால் அல்லாஹ் என்னை கப்ரில் வேதனை செய்வானே, அவ்வேதனை தாங்க முடியாமல் மனிதன் கதறுவதைக் கேட்டு ஏனைய உயிரினங்கள் அனைத்தும் அவ்விடத்தை விட்டும் விரண்டோடுகின்றதே! அப்படிப் பயங்கரமான தண்டனை எனக்குக் கிடைக்குமே என்று ஒரு கணம் உள்ளத்தில் விட்டுப் பார்.! தவறை செய்வதற்கு நினைத்துக் கூடப் பார்க்கமாட்டாய்.

06.உறுப்புக்கள் சாட்சிகளாக!:

மறுமை நாளில் உனது உடலுறுப்புக்கள் அத்தனையும் உனக்கு எதிராக சாட்சி சொல்லும் என்பதை சிந்தித்துப் பார்!

'அல்லாஹ்வின் எதிரிகள் நரகத்தை நோக்கி ஒன்று திரட்டப்படும் நாளில் அவர்கள் (அணி அணியாக) நிறுத்தப்படுவார்கள்.'

'இறுதியாக அவர்கள் அங்கு வந்ததும், அவர்களது செவிப்புலனும் அவர்களது பார்வைகளும் அவர்களது தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து அவர்களுக்கெதிராக சாட்சி கூறும்.' 'அவர்கள் தமது தோல்களிடத்தில், 'ஏன் நீங்கள் எமக்கு எதிராக சாட்சி கூறினீர்கள்?' எனக் கேட்பர். 'ஒவ்வொரு பொருளையும் பேசவைத்த அல்லாஹ்வே எங்களையும் பேசவைத்துள்ளான். அவனே முதல் முறையாக உங்களைப் படைத்தான். மேலும்,    நீங்கள் அவனிடமே மீட்கப்பட்டிருக் கிறீர்கள்' என்று அவை கூறும்.'
(41:19-21)

'இன்றைய தினம் அவர்களது வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து, அவர்களது கைகள் எம்முடன் பேசும். மேலும், அவர்களது கால்கள் சாட்சி கூறும்.'   (36:65)

இவ்வசனங்கள் பாவிகளுக்கு எதிராக பாவிகளின் உடலுறுப்புக்களே சாட்சி சொல்லும் என்று குறிப்பிடுகின்றது.

சகோதரனே! நீ ஒரு தவறை, பாவத்தை செய்வதற்கு முன்னர் இந்தத் தவறை, பாவத்தை நான் செய்து விட்டால் மறுமையில் யாருமே உதவாத அந்நாளில் எனது உடலுறுப்புக்கள் அத்தனையும் எனக்கு எதிராக சாட்சி சொல்லுமே. அந்நிலையில் நான் யாரிடம் உதவி கேட்பது என்பதை சற்று சிந்தித்துப் பார்!

07.மறுமையில் கைசேதம்:

தவறு செய்தால் அதற்காக மரணத்தின் போதும், மறுமையிலும் கைசேதப்பட வேண்டியிருக்குமே என்பதை சிந்தித்துப் பார்!

நீ தவறு செய்வதற்கு முன் இந்தத் தவறை நான் செய்துவிட்டால் அதற்காக வேண்டி மரணத்தின்போதும், மறுமையிலும் கைசேதப்பட வேண்டியிருக்குமே! என்பதை நினைத்துப் பார். அல்லாஹ் சொல்கிறான்.'

'முடிவாக, அவர்களில் ஒருவனுக்கு மரணம் வந்துவிட்டால், அவன் 'எனது இரட்சகனே! என்னை நீ (உலகிற்கு) திருப்பி அனுப்புவாயாக!' எனக் கூறுவான். 'நான் விட்டு வந்ததில் நல்லறம் புரிவதற்காக (திருப்பி அனுப்புவாயாக!) அவ்வாறன்று, நிச்சயமாக அது அவன் கூறும் வெற்று வார்த்தையேயாகும். அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு முன்னால் ஒரு திரை இருக்கின்றது.'   (23:99,100)

'அநியாயம் செய்தவன் தனது இரு கைகளையும் கடிக்கும் நாளில், 'என் கைசேதமே! இத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்திருக்க வேண்டாமா?' எனக் கூறுவான்'  'என் கைசேதமே! நான் இன்னாரை நண்பராக எடுக்காதிருந்திருக்கலாமே!' 'என்னிடம் அறிவுரை வந்த பின்பும் அதை விட்டும் நிச்சயமாக அவன் என்னை வழிகெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனை ஏமாற்றுபவனாக இருக்கின்றான்.' (25:27-29)

'அவ்வாறன்று, பூமி துகள் துகளாக தகர்க்கப்படும் போது,'

'வானவர்கள் அணி அணியாக நிற்க, உமது இரட்சகன் வருவான்.'

'அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில்தான் மனிதன் உணர்வு பெறுவான். அவ்வுணர்வு அவனுக்கு எப்படிப் பயனளிக்கும்?' 'என் 'கைசேதமே! எனது (மறுமை) வாழ்க்கைக்காக நான் (நல்லறங்களை) முற்படுத்தியிருக்க வேண்டுமே!' என்று அவன் கூறுவான்.' 'அந்நாளில் அவன் வேதனை செய்வது போன்று வேறு எவரும் வேதனை செய்ய முடியாது.'   (89:21-25)

ஆக நீ ஒரு தவறை செய்துவிட்டாய் அதற்காகவேண்டி மறுமையில் கைசேதப்படுவாய், கதறுவாய், கத்துவாய். ஆனால், என்ன பிரயோசனம்! ஒன்றுமேயில்லை. எனவே, மரணத் தறுவாயில், மறுமையில் நீ கைசேதப்படக் கூடாது எனில் தவறு செய்யாதே!

08.சாபத்தைத் தேடித்தரும!

நீ தவறு செய்தால் அது அல்லாஹ்வின் சாபத்தையும், வானவர்கள், நபிமார்கள், {ஹதாக்கள், நல்லவர்கள் ஆகிய அனைவரினுடைய சாபத்தையும் பெற்றுத்தரும். அதேபோல் உனக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருட்கொடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும்.

'இஸ்ராஈலின் சந்ததிகளில் நிராகரித்தோர், தாவூத், மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் நாவால் சபிக்கப்பட்டனர். ஏனெனில், அவர்கள் மாறுசெய்து, வரம்பு மீறிக்கொண்டிருந்ததே இதற்குக் காரணமாகும்.'

'அவர்கள் செய்து கொண்டிருந்த தீமையை விட்டும் அவர்கள் ஒருவரை யொருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டதாகும்.'

'அவர்களில் அதிகமானோர் நிராகரித்தோரை நேசர்களாக எடுத்துக்கொள்வதை நீர் காண்பீர். அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொள்ளும் அளவுக்கு அவர்களது ஆத்மாக்கள் தமக்காக முற்படுத்தியது மிகக் கெட்டதாகும். இன்னும் அவர்கள் வேதனையில்  நிரந்தரமாக இருப்பார்கள்.'   (5:78-80)

'நிச்சயமாக 'ஸபஃ' வாசிகளுக்கு அவர்களது வசிப்பிடத்தில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது. வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரு தோட்டங்கள் இருந்தன. உங்கள் இரட்சகனின் ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள். மேலும், அவனுக்கு நன்றி செலுத்துங்கள். (அது) தூய்மையான நகரம். (அவன்) மிக்க மன்னிக்கும் இரட்சகன் (என்றும் கூறப்பட்டது.)'

'ஆனால், அவர்கள் புறக்கணித்தனர். எனவே, நாம் அவர்கள் மீது (அணையை உடைக்கும்) 'அல்அரிம்' எனும் பெருவெள்ளத்தை அனுப்பினோம். அவர்களது இரு தோட்டங்களையும், புளிப்பும் கசப்பும் உள்ள பழங்களையுடைய மரங்களும், சிறிதளவு இலந்தை மரங்களுமுடைய இரு தோட்டங்களாக அவர்களுக்கு நாம் மாற்றினோம்.'

'அவர்கள் நிராகரித்த காரணத்தினால் இதுவே நாம் அவர்களுக்கு வழங்கிய கூலியாகும். நிராகரிப்பாளனுக்கேயன்றி (இவ் வாறு) நாம் கூலி கொடுப்போமா?' (34:15-17)

'இவ்வுலகிலும் அவருக்கு நாம் சிறந்ததையே வழங்கினோம். நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில்  இருப்பார்.' (16:122)

இவ்வசனங்கள் பாவம் செய்வதால் சாபம் ஏற்படுவதோடு, உனக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ள நிஃமத்கள் அத்தனையும் இல்லாமலாக்கப்படும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

ஆகவே, நீ தவறு செய்வதற்கு முன் 'நான் இந்தத் தவறை செய்துவிட்டால் அல்லாஹ்வினுடைய சாபமும் ஏனைய எல்லா உயிரினங்களின் சாபமும் என் மீது ஏற்படுமே.! அல்லாஹ் எனக்கு ரிஸ்க் வழங்காமல் விட்டுவிடுவானே!' என்று ஒரு தடைவ நினைத்துப் பார்!.    -இன்ஷா அல்லாஹ் தொடரும்-

Source from Unmai udaiyam Islamic monthly

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக