எழுதியவர் – சகோ. பைரூஸ்
சகோதரனே!
நீ தவறு செய்யாமல் இருப்பதற்காக அத்தவறை செய்வதற்கு முன் சில விடயங்களை நினைத்துப் பார்! என சென்ற தொடரில் சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடரிலேயே,
09.நீ தவறு செய்வதற்கு முன் நான் இந்தத் தவறை செய்து விட்டால் நபி(ஸல்) அவர்களுக்குரிய 'ஹவ்லுல் கவ்ஸர்' எனும் நீர்த் தடாகத்தில் நீர் அருந்தக் கூடிய பாக்கியம் இல்லாமல் போய்விடும். என்பதை சற்று நிதானமாக நின்று சிந்தித்துப் பார்!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'நான் நீர்த் தடாகத்தில் இருப்பேன். என்னை யார் கடந்து செல்கின்றாரோ அவர் அதில் நீர் பருகுவார். யார் அதில் நீர் பருகினாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. என்னிடம் (நீர்ப் பருக வந்த) சில கூட்டங்கள் திருப்பியனுப்பப்படுவர். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிந்திருப்பார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் திரையிடப்பட்டு விடும். எனவே நான் கூறுவேன். 'நிச்சயமாக அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் (அவர்களை விட்டு விடுங்கள்)'. 'அவர்கள் உமக்குப் பின்னால் (மார்க்கத்தில் புதிதாக) உருவாக்கியவைகளை நீர் அறியமாட்டீர்' என்று கூறப்படும். எனவே நான் 'எனக்கு மாறு செய்தவர்கள் தூரமாகட்டும்' என்று கூறுவேன்.' (அறிவிப்பவர்: அபூஸஈத் அல்ஹுத்ரிய்யீ(ரழி), ஸஹ்ல் பின் ஸஃத்(ரழி), ஆதாரம்: புஹாரி)
இந்த ஹதீஸ் நீ பித்அத் என்ற அந்தத் தவறை செய்துவிட்டாய் எனில் உனக்கு ஹவ்லுல் கவ்ஸரில் நீர் அருந்தக் கூடிய பாக்கியம் கிடைக்காது எனக் குறிப்பிடுகின்றது.
10.நீ தவறு செய்துவிட்டால் மறுமை நாளில் எல்லா படைப்பினங்களுக்கு முன்னாலும் நீ கேவலப்படுத்தப்படுவாய் என்பதை சிந்தித்துப் பார்!!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'நிச்சயமாக மோசடிக்காரனுக்கு மறுமை நாளில் ஒரு கொடி நட்டப்படும். இது இன்னாருடைய மகன் இன்னாருடைய மோசடி எனக் கூறப்படும்' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(வ), ஆதாரம்: புஹாரி)
எனவே நீ தவறு செய்துவிட்டால் நீ இன்ன குற்றத்தை செய்துவிட்டாய் என்பதற்கு அடையாளமாக ஒரு கொடி நாட்டப்பட்டு, எல்லோர் முன்னிலையிலும் இன்னாருடைய மகன் இந்தத் தவறை செய்ததற்கான கொடி இதுதான் என்று கூறப்படும். அந்நிலையில் எல்லோர் முன்னிலையிலும் நீ வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஏற்படும்.
ஆக! சகோதரனே! நீ தவறு செய்வதற்கு முன் நான் இந்தத் தவறை செய்துவிட்டால் எல்லோர் முன்னிலையிலும் அவமானத்தைச் சுமக்க வேண்டி வருமே என்பதை ஒரு முறை சிந்தித்துப் பார்!
11.நீ தவறு செய்வதற்கு முன் நான் இந்தத் தவறை செய்துவிட்டால் மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் எனக்கு அருகாமையில் சூரியன் கொண்டு வரப்படும். அப்போது நான் வியர்வையால் மூழ்கடிக்கப்படுவேனே என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'மறுமை நாளில் ஒரு அடியானுக்கு ஒரு மைல் அல்லது இரண்டு மைல் அருகாமையில் சூரியன் கொண்டு வரப்படும். அது அவர்களுக்கு கடும் சூடாக இருக்கும். எனவே அவர்களின் செயல் களுக்கு ஏற்ப வியர்வையில் (மூழ்கடிக்கப்பட்டு) இருப்பார்கள். அவர்களில் சிலரின் கனுக்கால் வரை வியர்வை இருக்கும். இன்னும் சிலரின் முழங்கால் வரையும், இன்னும் சிலரின் தொண்டைக்குளி வரையும், வேறு சிலரின் வாய் வரையும் வியர்வையால் மூழ்கடிக்கப்பட்டு இருப்பார்கள்.' (அறிவிப்பவர்: அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத்(ரழி) ஆதாரம்: திர்மிதி)
சாதாரணமாக இவ்வுலகத்தில் பல மைல்களுக்கு அப்பால் இருக்கக் கூடிய சூரியனின் வெப்பத்தையே என்னால் தாங்க முடியாது இருக்க, ஒரு மைல் அல்லது இரண்டு மைல்களுக்கு அப்பால் அந்த சூரியன் கொண்டு வரப்பட்டால் என்னுடைய நிலை எவ்வாறு இருக்கும்? இவ்வுலகத்திலாவது நிழலுக்காக மரம், கட்டிடங்களில் தஞ்சம் புகுந்து விடலாம். ஆனால் மறுமையில் எவ்வித நிழலுமே இல்லாத அந்நாளில் நான் என்ன செய்வேன்? என்று பாவத்தை செய்வதற்கு முன் நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும்.
12.நீ தவறு செய்துவிட்டால் மறுமை நாளில் உனது முகம் கருத்த நிலையில் நீ எழுப்பப்படுவாய் என்பதை ஒரு முறை கற்பனை பண்ணிப் பார்! அல்லாஹ் கூறுவதைப் பார் :
'சில முகங்கள் வெண்மையாகவும் இன்னும், சில முகங்கள் கருமையாகவும் இருக்கும் நாளில், எவர்களது முகங்கள் கறுத்து விட்டனவோ அவர்களிடம், 'நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்னரும் நிராகரித்தீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்' (என்று கூறப்படும்.)' (3:106)
'அந்நாளில் இன்னும் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும்.'
'அவற்றை (இழிவு எனும்) கருமை மூடியிருக்கும்.' (80:40,41)
நீ செய்த தவறின் காரணமாக மறுமை நாளில் உனது முகம் பயத்தின் காரணமாக கரு நிறமுடையதாகவும், பார்ப்பதற்கே பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதை தவறு செய்வதற்கு முன்னர் சிந்தி.
13.மறுமையில் ஷைத்தான் உன்னை விட்டும் நீங்கி விடுவான்.
நீ தவறு செய்வதற்கு தூண்டுகோளாய், பக்கபலமாய் நின்ற ஷைத்தான் மறுமையில் எனக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறிவிடுவான். நீ தவறு செய்ததற்காக வேண்டி வேதனைப்பட்டு, துன்பப்பட்டு, கவலையோடு இருக்கக் கூடிய நிலையில், இறைவனுடைய தண்டனையை பெற்றுக் கொண்டு இருக்கக் கூடிய நிலையில், குடும்பம். சொத்து, அதிகாரம் அத்தனையுமே உன்னை விட்டு விரண்டோடக் கூடிய நிலையில் இப்படி ஒரு வார்த்தையை ஷைத்தான் சொல்லும் போது உன்னால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அல்லாஹ் கூறுவதைப் பார்:
'தீர்ப்பு வழங்கப்பட்டதும், 'நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையையே வாக்களித்தான். நானும் உங்களுக்கு வாக்களித்தேன்ளூ ஆனால், உங்களுக்கு மாறு செய்தேன். நான் உங்களை அழைத்து எனக்கு நீங்கள் பதிலளித்ததைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமும் இருந்திருக்கவில்லை. ஆகவே, நீங்கள் என்னைப் பழிக்காதீர்கள். உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். நான் உங்களைப் பாதுகாப்பவனும் அல்லன். நீங்களும் என்னைப் பாதுகாப்பவர்களும் அல்லர். இதற்கு முன்னர் என்னை நீங்கள் இணை யாக்கிக் கொண்டிருந்ததை நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் என்று ஷைத்தான் கூறுவான். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு.' (14:22)
ஆகவே உனக்கு இப்படியான ஒரு நிலமை வரக் கூடாது என்றால் தப்பு, தவறு செய்வதற்கு முன் கொஞ்சம் யோசித்துப் பார்!!
14.அல்லாஹ்வின் முன்னிலையில் தனியாக நிற்கப் போகின்றாய்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் உங்களில் ஒவ்வொருவருடனும் எவ்வித மொழிபெயர்ப்பாளனும் இன்றி பேசுவான். மனிதன் தனது வலப்புறத்தைப் பார்ப்பான் அங்கு தான் முற்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் காணமாட்டான். அவன் தனது இடப்புறத்தைப் பார்ப்பான். அங்கும் தான் முற்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் காண மாட்டான். அவனுக்கு மத்தியில் பார்ப்பான். அவன் தனது முகத்துக்கு முன்னால் நரகத்தைத் தவிர வேறு எதனையும் பார்க்க மாட்டான். எனவே பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் கொடுத்து நரகை விட்டும் பயந்து கொள்ளுங்கள்.' (அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாதம்(ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)
சகோதரனே! நீ உன்னைப் படைத்து, பரிபாலித்த உனது ரப்புக்கு முன்னால் தனியாக நிற்கப் போகின்றாய். அப்போது நீ தவறு, அநியாயம் செய்திருந்தால்
உன் நிலமை எவ்வாறு இருக்கும்?
உன்னுடைய ரப்புக்கு என்ன பதில் சொல்லப் போகின்றாய்?
எப்படி உனது ரப்புக்கு முன்னால் போய் நிற்கப் போகின்றாய்?
உன்னை உனது பாவங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றது. யாரிடம் போய் உதவி தேடப் போகின்றாய்?
உன்னை யார் காப்பாற்றப் போவது?
சுப்ஹானல்லாஹ்!!! உன்னுடைய நிலமை பயங்கரமானதாக, கைசேதத்திற் குரியதாக இருக்கும். உன்னுடைய ரப்புக்கு உன்னால் பதில் சொல்ல முடியாது. செய்த குற்றத்திற்காக வெட்கித் தலை குனியப் போகின்றாய். உனது குடும்பங்களோ, நண்பர்களோ, பெற்றோர்களோ யாருமே உனக்கு உதவ வரமாட்டார்கள். அவர்கள் உன்னைக் கண்டால் விரண்டோடுவார்கள்.
இப்படியான ஒரு நிலமை உனக்கு வரக்கூடாது என்றால் பாவம் செய்வதற்கு முன் கொஞ்சம் சிந்தித்துப் பார்!
எனவே இறுதியாக மனிதர்களாகிய நாம் எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் பாவம் செய்வதற்கு முன் நாம் மேலே கூறிக்காட்டிய விடயங்களை ஞாபகமூட்டினோம் என்றால் நிச்சயமாக நமது வாழ்வில் தவறுகள் செய்யாது இந்த உலகத்தில் நல்ல மனிதர்களாக வாழ்ந்து மரணிப்போம் என்பதில் எள்ளலவும் சந்தேகம் இல்லை.
இவ்வுலகில் தவறுகள் செய்யாது, செய்த தவறுகளுக்காக வேண்டி இறைவனிடம் மன்றாடி மன்னிப்புக்கேட்டு தூய்மையான மனிதர்களாக மாறி, மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்காக வேண்டி தயார் செய்துள்ள உயர்தரமான சுவனமாகிய ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சுவனபதியை அடைய எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள் புரிவானாக! ஆமீன். (முற்றும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக