சனி, 27 அக்டோபர், 2012

இன்னும் ஏன் தாமதம்


அன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே! இன்னும் ஏன் தாமதம் ? உங்களில் எவர் செயலால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் (அல்லாஹ்) மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்பவன். (அல்குர்ஆன் – 67:02)
இலக்கை நோக்கிப் பயணிக்கிற ஒவ்வொரு கொள்கை கூடாரங்களுக்கும், இளைஞர்கள் தான் இதயத் துடிப்பு. ஏனெனில் இலக்கு எதுவாயினும் அதனை வீரியத்தோடு கச்சிதமாய் முடிக்கும் ஆற்றல் இளைஞர்களிடத்திலேயே மிக அதிகம். எத்துணையோ தற்காலிக உலக இலக்குகளுக்காக, தங்களின் வாழ்வையே அர்ப்பணிக்கிற இளைஞர்கள் இருக்கிறபொழுது,

மாண்டு போகாத மறுமை வாழ்வு என்னும் நித்திய இலக்கிற்காக ஏன் இஸ்லாமிய இளைஞர்களே நாம் நமது வாழ்வை அர்ப்பணிக்க கூடாது ?
நமக்காக நம்முடைய சுயநலங்களுக்காக நம்முடைய குடும்பத்திற்காக மட்டும், நம் வாழ்வின் முழு பகுதியையும் செலவிடுவது தான் ஒரு முஸ்லிமின் பண்பா ? நம்மை படைத்த இறைவன் இவ்வுலகில் கனிசமான வாழ்நாளையும், வாழ்வாதாரத்தையும் உலக நோக்கத்திற்காக தான் தந்தானா ?
இங்கு நாம் இருப்பது வெறுமனே காலங்கழிப்பதற்கில்லை உயர்வானதோர் லட்சியத்திற்காக
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் – 06:32)
ஏனைய உலக இலக்குகளுக்காக பயணிக்கிற பலரது பயணம் பாதியிலே நிராசையுடன் போகக்கூடியது. ஆனால் மறுமை இலக்கிற்காக பயணிக்கிற நமது பயணம் முடிவுராத நிரந்தர வாழ்வை நோக்கிய பயணம்.
வெறுமனே லட்சியங்கள் எதுவுமில்லாமல் அலட்சியத்தோடே நமது வாழ்வு முடிந்துபோகுமானால் எதற்காகவும் முயற்சிக்காத நமக்கு மறுமை வாழ்வு எப்படி பிரகாசமானதாய் இருக்கும்?
இறைதிருப்தியை பெறுவதற்காகவே தனது வாழ்வை அமைத்திட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறையினைப் பின்பற்றாமல் எப்படி இறைதிருப்தியை பெற முடியும்.
அல்லாஹ்வின் திருப்தியை பெறாதவர்களாய் எப்படி அல்லாஹ்வை இன்முகத்தோடு சந்திக்க முடியும்?
இஸ்லாம் என்னும் படகில் இளைஞர்களான நாம் துடுப்பாய் இருப்போம். மறுமை இலக்கை அடைய காலதாமதமின்றி ஓடாய் உழைப்போம்.
ஈமான் கொணடவர்களே!
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் – 59:18)
எழுதியவர்: சகோ. கோவை A.M.முஹம்மது ஷஃபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக